உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் உட்பட 84 பேர் மீது வழக்கு

Published On 2023-07-15 15:22 IST   |   Update On 2023-07-15 15:22:00 IST
  • கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலைமையில் பலர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
  • இந்த மறியல் போராட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறித்து டவுன் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா புகார் கொடுத்தார்.

சேலம்:

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் பெரியசாமி (வயது 35). இவர் சேலம் தாதகாப்பட்டியில் நேற்று முன்தினம் தாக்கப்பட்டார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இது குறித்து விசாரணை நடத்திய அன்னதானப்பட்டி போலீசார் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே தாக்குதலுக்கு காரணமான லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலைமையில் பலர் சாலை மறியல் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறித்து டவுன் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா புகார் கொடுத்தார். அதன் பெயரில் சண்முகராஜா உட்பட 57 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதேபோல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது குறித்து டவுன் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், சங்கத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் குரு பிரசன்னா உள்பட 27 பேர் மீது அனுமதியின்றி கூடியது, போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை சமீப காலமாக அதிகரித்துள்ளது. தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுத்து சம்பந்தப்பட்ட சமூக விரோதிகள் கைது செய்யப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News