உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணை பூங்காவிற்கு ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் வருகை

Published On 2023-06-05 09:05 GMT   |   Update On 2023-06-05 09:05 GMT
  • மேட்டூர் அணையில் கிழக்கு மேற்கு கால்வாய் பகுதியிலும், காவிரி பாலம் பகுதியிலும் சுற்றுலா பயணிகள் நீராடினர்.
  • மேட்டூர் அணை பூங்காவுக்கு நேற்று ஒரே நாளில் 11,295 பேர் வந்து சென்றனர்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோடை விடுமுறை முடிய 2 நாட்களே உள்ளதால் நீர்வளத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த பூங்காவிற்கு நேற்று சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் உட்பட வெளி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

காவிரி ஆற்றில் வெகு நேரம் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், பின்னர் பூங்காவில் பொழுதை கழித்தனர். பூங்காவில் இருந்த பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு மகிழ்ந்தனர்.

சிறியவர் பெரியவர் என வயது வித்தியாசம் இன்றி ஊஞ்சலாடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். பூங்காவில் அமர்ந்து குடும்பத்துடன் உணவு அருந்தியும் ஓய்வு எடுத்தும் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.

சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சாலையோர கடைகளில் அதிக விற்பனை காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணை மீன்களை வாங்கி சமைத்து சுவைத்தனர். இதனால் மீன் வியாபாரம் களை கட்டியது.

பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்களில் வந்திருந்ததால் மேட்டூர் - கொளத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

மேட்டூர் அணையில் கிழக்கு மேற்கு கால்வாய் பகுதியிலும், காவிரி பாலம் பகுதியிலும் சுற்றுலா பயணிகள் நீராடினர்.

மேட்டூர் அணை பூங்காவுக்கு நேற்று ஒரே நாளில் 11,295 பேர் வந்து சென்றனர். இதன் மூலம் பார்வையாளர்கள் கட்டண மாக 56 ஆயிரத்து 475 வசூல் ஆனது. அணையின் வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 886 பேர் வந்து சென்றனர்.

Tags:    

Similar News