உள்ளூர் செய்திகள்

தியாகதுருகத்தில் கள் விற்பனை:தலைவலியால் அவதியுறும் 'குடி' மகன்கள்

Published On 2023-02-23 08:06 GMT   |   Update On 2023-02-23 08:06 GMT
  • தியாகதுருகம் பகுதியில் பனை மர கள் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது..
  • போதை அதிகமாக இருப்பதற்க்காக போதை பவுடர் கலக்கின்றனர். இதனால் கள் குடிப்பவர்களுக்கு தலைவலி ஏற்படுகிறது

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராய ன்மலை, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை போலீஸ் துறையினர் அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து சாராய ஊரல்களை அழித்து வருகின்றனர். சாராயம் காய்ச்சும் மற்றும் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம் பகுதியில் பனை மர கள் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.அதன்படி தியாகதுருகம் பகுதியில் கொங்கராயபாளையம், சித்தலூர், கண்டாச்சி மங்கலம் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பனை மரங்களில் பதநீர் இறக்குவதாக கூறிவிட்டு கள் இறக்கப்படுகிறது. இவ்வாறு இறக்கப்படும் கள் ஜக்கு ஒன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிகாலை 6 மணி முதல் 9 மணி வரை சுமார் 3 மணி நேரத்திற்குள் கள் விற்பனை முடிந்து விடுகிறது. சாராயம் மற்றும் மதுபாட்டில்களை விட விலை குறைவாக உள்ளதாலும், கிராமங்களில் எளிதில் கிடைப்பதாலும் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் கள் குடிக்க சென்றுள்ளனர்.இவ்வாறு பனை மரங்களில் கள் இறக்கி விற்பவர்கள், குடிப்பவர்களுக்கு போதை அதிகமாக இருப்பதற்க்காக போதை பவுடர் கலக்கின்றனர். இதனால் கள் குடிப்பவர்களுக்கு தலைவலி ஏற்படுகிறது. இதனால் கள் குடிப்பவர்கள் மட்டுமின்றி அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் அவதியடைகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், இது குறித்து ஆய்வு செய்து கள் இறக்குபவர்கள், அதை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News