உள்ளூர் செய்திகள்

தடைசெய்யப்பட்ட எலி மருந்து விற்பனை: உரக்கடைகளில் வேளாண்மை அதிகாரி திடீர் ஆய்வு

Published On 2023-07-11 07:10 GMT   |   Update On 2023-07-11 07:10 GMT
  • ரேட்டால் என்ற 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்து தயாரிக்கப்பட்ட எலி மருந்து மத்திய மற்றும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
  • மாவட்டத்தில் யாரேனும் ரேட்டால் மருந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது பூச்சி மருந்து சட்டம் 1968 இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தருமபுரி,

தடைசெய்யப்பட்ட எலி மருந்து உரக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என தருமபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் விஜயா மற்றும் தருமபுரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) தாம்சன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ரேட்டால் எலி மருந்து விற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில் ரேட்டால் என்ற 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்து தயாரிக்கப்பட்ட எலி மருந்து மத்திய மற்றும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த அபாயகரமான மருந்தை விற்பனை செய்ய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தருமபுரி மாவட்ட மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்துக் கடைகள் உள்ளிட்ட எந்த கடைகளிலும் இந்த மருந்தை விற்பனை செய்யக்கூடாது.

அதேபோல, பொதுமக்களும் இந்த மருந்தை எந்த காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம். இம்மருந்து விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிய வேளாண்துறையை உள்ளடக்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, மாவட்டத்தில் யாரேனும் ரேட்டால் மருந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது பூச்சி மருந்து சட்டம் 1968 இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இம்மருந்து விற்பனை செய்வது தெரிய வந்தால் தருமபுரி (9443635600), நல்லம்பள்ளி (7010172866), பாலக்கோடு (9952401900), காரிமங்கலம் (8526719919), பென்னாகரம் (9443207571), அரூர் (7010983841), மொரப்பூர் (6369976049), பாப்பிரெட்டிப்பட்டி (9444497505) ஆகிய வட்டாரங்களுக்கான பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News