உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே ரஞ்சிதமே பாடலுக்கு பாவாடை, தாவணியில் நடனமாடிய ரஷ்ய பெண்கள்

Published On 2023-01-20 14:43 IST   |   Update On 2023-01-20 14:43:00 IST
  • ரஷ்ய கலைஞர்களுக்கு பள்ளி நிர்வாகம் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
  • மாணவர்கள் கரகோஷம் எழுப்பி கலைஞர்களை உற்சாகப்படுத்தினர்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே எஸ்.எஸ்.வி.எம் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், இந்திய-ரஷ்யா நல்லுறவை வெளிப்படுத்தும் வகையில் ரஷ்ய நாட்டு கலாச்சாரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடன நிகழ்ச்சி நடந்தது.

விழாவுக்கு பள்ளியின் நிர்வாக அறங்காவலர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். இந்த நடன நிகழ்ச்சியில் ரஷ்ய நாட்டினை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று தங்களது நாட்டின் பல்வேறு கலாச்சார நாட்டிய நடனங்களை மேடையில் அரங்கேற்றினர்.

ரஷ்ய கலைஞர்களின் நடனமும், அவர்களின் கலாசராமும் மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. மாணவர்கள் கரகோஷம் எழுப்பி கலைஞர்களை உற்சாகப்படுத்தினர். ரஷ்ய கலைஞர்கள் தங்கள் நாட்டு கலாச்சாரம் மட்டுமின்றி தமிழகத்தின் பாரம்பரிய உடையிலும் நடனமாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

அதிலும் குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள வாரிசு படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே பாடலுக்கு ரஷ்ய பெண் கலைஞர்கள், தமிழர்களின் பாரம்பரிய உடையான பாவாடை, தாவணியில் வந்து நடனம் ஆடி அசத்தினர்.

இது அங்கிருந்த மாணவர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது. இதனை தொடர்ந்து ரஷ்ய கலைஞர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இதுகுறித்து கலாச்சார குழுவின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தங்கப்பன் கூறும்போது, இந்தியா-ரஷ்ய நாட்டு கலாச்சாரத்தை தமிழ்நாடு மாணவர்களுக்கு எடுத்து கூற வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து 20-வது ஆண்டாக இந்தியாவிற்கு ரஷ்ய கலைஞர்கள் சுற்றுப்பயணம் வந்துள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளில் இம்மாத இறுதி வரை ரஷ்ய கலாச்சார நடன நிகழ்ச்சியை நடத்த உள்ளனர் என்றார்.

Tags:    

Similar News