மாமல்லபுரத்தில் தொடர் கடல்சீற்றம்- படகுகளை வேறு இடத்திற்கு மாற்றிய மீனவர்கள்
- மீனவர்கள் படகுளை வழக்கமாக நிறுத்தி வைக்கும் பகுதியில் கடல்நீர் சூழ்ந்து வருகிறது.
- மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட கலெக்டர் மற்றும் மீன்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மாமல்லபுரம்:
தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் மீன்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மாமல்லபுரம், தேவநேரி, வெண்புருஷம், சதுரங்கபட்டிணம், புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் உள்ளிட்ட கடலோர பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மாமல்லபுரம் கடற்கரை கோயில் வடக்கே மீனவர் பகுதியில் தொடர் கடல் சீற்றத்தால், மீனவர்கள் படகுளை வழக்கமாக நிறுத்தி வைக்கும் பகுதியில் கடல்நீர் சூழ்ந்து வருகிறது.
இதனால் அப்பகுதி மீனவர்கள் கடற்கரை கோயில் சுற்றுச்சுவர் அருகே உள்ள உயரமான இடத்தில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
மிஷின், வலைகளை வீடுகளுக்கு எடுத்து சென்றனர். மறு உத்தரவு வந்ததும், இந்த பகுதியில் இருந்து தற்காலிகமாக மீன்பிடிக்க செல்வதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.