சி.சி.டி.வி காமிராவில் பதிவான கொள்ளையன் உருவம்.
திண்டுக்கல் அருகே பர்னிச்சர் கடையில் புகுந்த முகமூடி கொள்ளையன்
- மேற்கூரை வழியே துளைபோட்டு பர்னிச்சர் கடையில் புகுந்த முகமூடி கொள்ளையன் பணம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தான்.
- இதே கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.86ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-நத்தம் சாலையில் தனியாருக்கு சொந்தமான பர்னிச்சர் கடை உள்ளது. இந்த கடையில் நேற்றிரவு மேற்கூரை வழியே துளைபோட்டு ஒரு மர்மநபர் உள்ளே நுழைந்தார். முகத்தை மறைத்தபடி வந்த அந்த நபர் கடையின் பல்வேறு பகுதிகளில் தேடினார்.
ஆனால் கடையில் பணம் எதுவும் சிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த ஆசாமி அங்கிருந்து சென்றுவிட்டார். இன்று காலையில் கடைக்கு வந்த உரிமையாளர் பொருட்கள் சிதறிகிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் கடையில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில் முகத்தை மறைத்தபடி மர்மநபர் கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது பதிவானது.
அந்த காட்சிகளை கொண்டு நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேகடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லாவில் இருந்த ரூ.86ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அந்த கொள்ளையில் இதுவரை யாரும் பிடிபடாத நிலையில் மீண்டும் ஒரு கொள்ளை முயற்சி நடந்துள்ளது பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.