உள்ளூர் செய்திகள்

ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு சாலை பணி கிடப்பில் உள்ள காட்சி.

கல்வராயன்மலையில் கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி: கிராம மக்கள் வேதனை

Published On 2022-08-14 09:13 GMT   |   Update On 2022-08-14 09:13 GMT
தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணியும் அப்பொழுது தொடங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 171 மலை கிராமங்கள் உள்ளன. இதில் குண்டியாநத்தம், ஊராட்சிக்கு உட்பட்டது கருவேலம்பாடி, சின்ன கருவேலம்பாடி, மேட்டுவளவு கிராமங்கள். இந்த 3 கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 1000 மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக சாலை வசதிகள் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் இந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் நொச்சிமேடு கிராமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் கரடு முரடான செங்குத்தான மலைப்பாதையில் தான் செல்ல வேண்டும் இந்தபகுதி மக்கள் அவசரத்துக்கு கூட மருத்துவத்திற்கோ அத்தியாவசிய பொருட்களை வாங்க வர முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மண் சாலைகள் அமைத்து அதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பகுதி மக்கள் சாலை வசதி வேண்டுமென்று பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நொச்சி மேடு முதல் கருவேலம்பாடி வரை 5 கிலோமீட்டர் தூரத்திற்கு 1 கோடியே 54 லட்சம் தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணியும் அப்பொழுது தொடங்கப்பட்டது. ஆனால் அப்போதைய வனத்துறையினர் இந்த கிராமத்திற்கு சாலை அமைக்க கூடாது. இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சாலை அமைக்க கூடாது என்று தடுத்து நிறுத்தினார்கள். அதன் பிறகு தார்சாலை அமைக்க வனத்துறையினரிடம் அனுமதி கேட்டு மனு அளித்தனர். அதன்பிறகு ஒரு வருடத்திற்கு பிறகு 2022 ஜூலை மாதம் கருவேலம்பாடி கிராமத்திற்கு சாலை அமைக்க அதுவும் 2.50 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே வனத்துறை அனுமதி வழங்கியது.

இருந்தாலும் 21/2 கிலோமீட்டர் முதலில் சாலை பணியை தொடங்கி விடலாம் என்று ஊராகவளர்ச்சித் துறையினர் ஜூலை 15ஆம் தேதி உதயசூரியன் எம்.எல்.ஏ. வைத்து பூமி பூஜை போட்டு சாலை பணியை தொடங்கி வைத்தனர். அதன்பின் சாலை பணிகள் தொடங்கி ஜல்லி கொண்டுவரப்பட்டு சாலைகள் சீரமைக்கும் பணியும் தொடங்கியது. ஆனால்மீண்டும் வனத்துறையினர் வனத்துறைக்கு சொந்தமான இடம் எது என்று முதலில் அளவீடு செய்து வனத்துறையிடம் காண்பித்து விட்டு அதன் பிறகு நீங்கள் சாலைகள் போட வேண்டும் என்று கூறி வனத்துறையினர் மீண்டும் சாலை பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்களுக்கு இப்போது தான் சாலை வசதி வருகிறது என்று நிம்மதியாக இருந்தனர் ஆனால் அதையும் தடுத்து நிறுத்தி உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனையில் உள்ளனர்.

Tags:    

Similar News