உள்ளூர் செய்திகள்

மகனுக்கு எழுதி கொடுத்த சொத்து பத்திரத்தை பெற்றோர் ரத்து செய்தது சரிதான்: ஐகோர்ட்டு தீர்ப்பு

Published On 2022-10-14 08:03 IST   |   Update On 2022-10-14 08:03:00 IST
  • முதுமையில் மனம் நோகாமல் பெற்றோரை பிள்ளைகள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • பெற்றோருக்கு இருக்கும் கடமை உணர்வு, சட்ட ரீதியாக பிள்ளைகளுக்கும் உண்டு.

சென்னை :

சென்னையை சேர்ந்த நாகராஜன், சரோஜா தம்பதி. நாகராஜன் விமானப்படையில் அதிகாரியாகவும், சரோஜா நர்சாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு ராஜசேகர், ராஜேஷ் என்று 2 மகன்கள்.

மூத்த மகன் ராஜசேகர் ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தங்கள் பெயரில் இருந்த வீட்டை இவரது பெயரில் நிபந்தனையுடன் பெற்றோர் எழுதி வைத்தனர். தங்களது கடைசி காலம் வரை மருத்துவ செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் மூத்த மகன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கடந்த 2012-ம் ஆண்டு நாகராஜன் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 4 அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டார். அப்போது மூத்த மகன் ராஜசேகரை தொடர்பு கொண்டபோது, அவர் எந்த உதவியும் செய்யவில்லை. பல லட்சம் ரூபாயை சரோஜா செலவு செய்து, கணவரை காப்பாற்றியுள்ளார். பின்னர் சரோஜா உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது, உதவி கேட்டு, மூத்த மகனுக்கு தந்தை இ-மெயில் கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு எந்த பதிலும் இல்லை. இதனால், சரோஜா ஆஸ்பத்திரியிலும், அவரது கணவர் நாகராஜன் முதியோர் இல்லத்திலும் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனால், அவர் பெயரில் எழுதி வைத்த செட்டில்மெண்ட் பத்திரத்தை நாகராஜனும், சரோஜாவும் 2014-ம் ஆண்டு ரத்து செய்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பறிபோனதால், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் ராஜசேகர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்தது தவறு என்று தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், நாகராஜன், சரோஜா ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் சாரதா விவேக் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை ஏன்நோற்றான் கொல் எனும் சொல்" என்ற திருக்குறளை உதாரணமாக கூறி நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

பெற்றோருக்கு இருக்கும் கடமை உணர்வு, சட்ட ரீதியாக பிள்ளைகளுக்கும் உண்டு. முதுமையில் மனம் நோகாமல் பெற்றோரை பிள்ளைகள் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், இதை பெரும்பாலான பிள்ளைகள் ஏற்க மறுப்பது வேதனையாக உள்ளது. இந்த வழக்கில் மூத்த மகனின் செயல்பாடு இரக்கமற்றது ஆகும்.

அவருக்கு தந்தை அனுப்பிய இ-மெயிலில், "அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை. அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க டாக்டர்கள் கூறுகின்றனர். அப்படி ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டால், நான் எங்கே போவது? முதியோர் இல்லத்துக்கு போகவா? தம்பி ராஜேஷ் போன் எடுக்கவில்லை. எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. என்ன செய்வது? உடனே சொல்" என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்த இ-மெயில் கடிதத்துக்கு மூத்த மகன் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. பெற்றோரை கடைசி காலத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பை மகன் மறந்து விட்டான். தனக்கு எழுதி வைத்த செட்டில்மெண்ட் படி, வீட்டு வாடகையை மட்டுமே பெற்றோர் சாகும் வரை வசூலிக்கலாம். அதற்காக செட்டில்மெண்ட்டை ரத்து செய்ய முடியாது என்று மகன் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், கடந்த 2007-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம், பிரிவு 23-ன்படி, பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளின் பெயரில் எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களை சட்ட ரீதியாக ரத்து செய்ய பெற்றோருக்கு முழு உரிமை உண்டு.

இந்த வழக்கில் தாயும், தந்தையும் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போது அவர்களை மகன் கவனிக்கவில்லை. பணம் கொடுத்து உதவி செய்யவும் இல்லை. எனவே, மகனுக்கு எழுதி வைத்த செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்தது சரியானதுதான்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

Similar News