செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 3 பேர் மீட்பு உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
- கால கட்டத்தில பாண்டிதுரை, சக்தி, மல்லிகா ஆகிய 3 பேரும் ரத்தினகலாவிற்கு சொந்தமான செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர்.
- மேலும் அவர்களை சாதி பெயரை கூறி திட்டினார்கள்.
ஊத்தங்கரை,
ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ள ஆவரன்குட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டிதுரை (வயது 33). அதே பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் (32), மல்லிகா (36). கூலித் தொழிலாளர்கள்.
ஊத்தங்கரை அருகே உள்ள கல்லூரை சேர்ந்தவர் ரத்தினகலா (48). இவரிடம் பாண்டிதுரை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கடனாக பெற்றார். அதே போல சக்தி மற்றும் மலலிகா ஆகியோர் ரூ.40 ஆயிரம் கடனாக பெற்றனர்.
இதில் சக்தியும், மல்லிகாவும் ஆகியோர் வட்டியுடன் சேர்த்து ரூ.50 ஆயிரம் திரும்ப செலுத்தினார்கள். இந்த கால கட்டத்தில பாண்டிதுரை, சக்தி, மல்லிகா ஆகிய 3 பேரும் ரத்தினகலாவிற்கு சொந்தமான செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து வெளியேறி சென்றனர். இந்த நிலையில் ரத்தினகலாவும், அவரது உறவினருமான வேலு (45) என்பவரும் சேர்நது பாண்டிதுரை, சக்தி, மல்லிகா ஆகியோரை மீண்டும் தங்களின் செங்கல் சூளைக்கு அழைத்து வந்து, வேலை செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் மீதம் உள்ள தொகையை தர வேண்டும் என கூறி மிரட்டி தாக்கினார்கள். மேலும் அவர்களை சாதி பெயரை கூறி திட்டினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை கிராம நிர்வாக அலுவலர் பாபு சம்பவ இடத்திற்கு சென்று பாண்டிதுரை, சக்தி, மல்லிகா ஆகியோரை மீட்டார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பாபு கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின் விசாரணை நடத்தி ரத்தினகலா, வேலு ஆகியோர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், கொத்தடிமை தடை சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.