உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கால்நடைகளுக்கான தீவன தேவையை பூர்த்தி செய்யும் அசோலா வளர்ப்பு விவசாயிகள் ஆர்வம் காட்டுவார்களா?

Published On 2022-06-25 08:23 GMT   |   Update On 2022-06-25 08:23 GMT
  • அசோலாவை மண்ணில் கலந்து மக்க விடும்போது சிறந்த உயிர் உரமாகவும் செயல்பட்டு மகசூல் அதிகரிக்க உதவுகிறது.
  • கால்நடை வளர்ப்பை பலரும் கைவிடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

திருப்பூர் :

விவசாயம் சார்ந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு உள்ளது. கால்நடைகளுக்கான தீவனத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு பெருமளவு செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.சமச்சீர் உணவு அளிப்பதன் மூலமாகவே கால்நடைகள் மூலம் வருமானம் ஈட்ட முடியும் என்ற சூழலில், வருவாயில் 70 சதவீதத்தை தீவனத்துக்காகவே செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இதனால் கால்நடை வளர்ப்பை பலரும் கைவிடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

இத்தகைய நெருக்கடியான நிலையில் கால்நடை வளர்ப்போருக்கு வரப்பிரசாதமாக இருப்பது அசோலா தீவனமாகும்.இது கால்நடைகளின் சிறந்த தீவனமாக மட்டுமல்லாமல் தாவரங்களுக்கு உயிர் உரமாகவும், மனிதர்களுக்கு சத்துள்ள உணவாகவும் பயன்படுகிறது. புரதச்சத்து நீரில் வளரும் பாசி வகையை சேர்ந்த அசோலா, மூக்குத்திச் செடி, கம்மல் செடி என பல பெயர்களில் அழைக்கப்படும் நீலப்பச்சை பாசியாகும்.இதனை ஆடு, மாடு, கோழி, முயல், மீன், பன்றி உள்ளிட்ட அனைத்து கால்நடைகளுக்கும் உணவாகப் பயன்படுத்தலாம்.

அசோலாவை கறவை மாடுகளுக்குத் தீவனமாக கொடுக்கும் போது ஒரு லிட்டர் வரை பால் உற்பத்தி அதிகரிப்பதுடன் தரமும் மேம்படுகிறது.ஒரு மாட்டுக்கு ஒரு கிலோ அசோலாவை தீவனமாகக் கொடுக்கும் போது ஒரு கிலோ புண்ணாக்கு கொடுப்பதற்கு சமமாகும்.அசோலாவில் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் இதனை தீவனமாக உட்கொள்ளும் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பல்வேறு சத்துக்கள் அடங்கியதாக உள்ளதால் கால்நடைகள் மட்டுமல்லாமல் நாமும் கீரைகளைப் போல அசோலாவைப் பயன்படுத்தி சூப், பொரியல், வடை போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.

அத்துடன் அசோலாவை மண்ணில் கலந்து மக்க விடும்போது சிறந்த உயிர் உரமாகவும் செயல்பட்டு மகசூல் அதிகரிக்க உதவுகிறது.10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட ஒரு அசோலா தொட்டியில் 15 நாட்களுக்குள் 30 முதல் 40 கிலோ வரை அசோலா உற்பத்தி செய்ய முடியும்.மேலும் 3 ல் 2 பங்கு என்ற வகையில் தொடர்ச்சியாக அறுவடை செய்ய முடியும். இதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. எனவே அசோலா வளர்ப்புப் பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.இதன்மூலம் கால்நடைகளுக்கான தீவனச்செலவு பெருமளவு குறைவதுடன், பலரும் கால்நடை வளர்ப்பைக் கைவிடும் நிலையைத் தவிர்க்கலாம்.

Tags:    

Similar News