உள்ளூர் செய்திகள்

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கு விண்ணப்பப் பதிவு

Published On 2023-02-26 08:55 GMT   |   Update On 2023-02-26 08:55 GMT
  • தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
  • ஒவ்வொரு ஆண்டும் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.

சேலம்:

இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.

அதற்கான கட்டணத்தை அரசு அந்த பள்ளிகளுக்கு செலுத்துகிறது. இந்த நிலையில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு அடுத்த மாதம் (மார்ச்) 20-ந்தேதி தொடங்குகிறது. வருகிற ஏப்ரல் மாதம் 20-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. அரசு இதற்கான முன்னேற்பாடுகளை செய்துவரும் நிலையில், தனியார் பள்ளிகள் இந்த திட்டத்தை தொடருவது பற்றி பரிசீலிப்போம் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம் தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு கடந்த 2 ஆண்டுகளாக வழங்கவில்லை.

இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு பள்ளிக்கல்வித் துறை தயாராகிவருவது அதிர்ச்சியளிக்கிறது. எனவே நிலுவை கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு விடுவிக்கவேண்டும். அப்படி இல்லையென்றால், 25 சதவீத இலவச சேர்க்கையை தனியார் பள்ளிகளில் தொடருவது பற்றி பரிசீலனை செய்யவேண்டிய நிலை வரும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News