உள்ளூர் செய்திகள்

பழைய கட்டிடத்தை இடித்து புதிய வணிக வளாகம் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு

Published On 2022-09-29 14:49 IST   |   Update On 2022-09-29 14:49:00 IST
  • நகராட்சி ஆணையர் லதா தலைமையில் ஆலோசனை கூட்டம்
  • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.

அரக்கோணம்:

அரக்கோணம் நகராட்சியில் ஏற்கனவே உள்ள மார்கெட் கட்டிடத்தை இடித்து ரூ.9 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரக்கோணம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கடைகள் கட்டப்பட்டு காய், பழங்கள், இறைச்சி, பூக்கள் விற்பனை செய்ய வணிகர்களுக்கு 194 கடைகள் வாடகை விடப்பட்டது. மேலும் 64 நபர்கள் பல ஆண்டுகளாக அனுமதியின்றி திறந்த வெளியில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த கடைகள் பராமரிப்பின்றி தற்போது மோசமான நிலையில் உள்ளது. இதனால் தமிழக அரசு ரூ.9 கோடி மதிப்பீட்டில் 4 இருசக்கர வாகன நிறுத்துமிடம், கேன்டீன், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய வணிக வளாகத்தில் 231 கடைகளை கட்ட திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஆலோசனை கூட்டம் நகராட்சி ஆணையர் லதா தலைமையில் நடைபெற்றது.

இதில் நகரமன்ற தலைவர் லட்சுமி நகராட்சி பொறியாளர் ஆசீர்வாதம் நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பெண் வியாபாரி ஒருவர் பழைய கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே கொரோனா ஊரடங்கினால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு தற்போது சிறிது சிறிதாக அதிலிருந்து மீண்டு வருகின்ற வேலையில் கடைகளை இடித்தால் நான் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பேன் என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News