ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்
ஜவுளி உற்பத்தி தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க ஆலோசனை
- கலெக்டர் ஆபீசில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் துணி நூல் துறையின் சேலம் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தின் சார்பில், அரசு மானியத்துடன் கூடிய சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்க ஜவுளி உற்பத்தி தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஜவுளி உற்பத்தி தொழில்
மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது :-ராணிப்பேட்டை மாவட்டம் வளம் நிறைந்த மாவட்டம். இத்தகைய சிறப்பு பெற்ற மாவட்டம் தொழில்துறையில் சிறந்து விளங்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு தொழிற் பூங்காக்கள் உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு தமிழ்நாடு அரசு 50 சதவீதம் மானியம் மற்றும் ரூ.2 கோடியே 50 லட்சம் வரை மானியமாக நிபந்தனைகளுடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அவ்வாறு அமையவுள்ள ஜவுளி பூங்காக்கள் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்துடன் குறைந்தபட்சமாக 3 தொழில் கூடங்களுடன் அமைக்கப்பட வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜவுளி பூங்காக்கள் அமைத்திட சேலம் மாவட்டம், சங்ககிரி மெயின் ரோடு, குகை பகுதியில் அமைந்துள்ள தூணிநூல் துறையின் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகி தங்கள் விண்ணப்பங்களை வழங்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் துணிநூல் துறையின் சேலம் மண்டல துணை இயக்குனர் அம்சவேணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன், அரசு அலுவலர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தி தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.