உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டையில் 620 தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம்

Published On 2023-05-03 13:23 IST   |   Update On 2023-05-03 13:23:00 IST
  • 13 வகை உணவு வழங்கப்படும்
  • துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடந்தது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் வருகின்ற கல்வியாண்டில் மாவட்டத்தில் அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் செயல்படுத்துவது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.

காலை உணவு திட்டம்

கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது: -

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராமப் பகுதியில் உள்ள 538 பள்ளிகள், நகராட்சி பகுதிகளில் 41 பள்ளிகள், பேரூராட்சி பகுதிகளில் 41 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 620 தொடக்கப் பள்ளிகள் உள்ளன.

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் வருகிற கல்வி ஆண்டு முதல் செயல்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பள்ளிகளில் தற்பொழுது செயல்பாட்டில் உள்ள மதிய உணவு திட்ட சமையல் கூடங்களிலேயே காலை உணவு சமையல்கள் தயாரிக்கப்படும்.

சமையல் கூடங்கள் இல்லாத பள்ளிகளில் புதிய சமையல் கூடங்கள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காலை உணவு திட்டத்திற்கு அரிசி. உப்பு, எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு போன்ற முக்கிய பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வழங்கப்படும்.

கோதுமை, ரவா, சோளரவா, சேமியா, பாசிப்பருப்பு, சிவப்பு மிளகாய், கடுகு, மிளகு,சிறு தானியங்கள் போன்ற பொருள்கள் இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்படும்.

இதற்கென ரொக்க நன்கொடைகள் பெற்றிடுவது அனுமதிக்கப்படாது. தற்பொழுது 13 வகையான உணவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது, இதில் 5 வகையான உணவுகள் வழங்கப்படும். சிறுதானிய உணவுகளை அதிக அளவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு உணவு தயாரித்து பரிமாறப்படுவதை மகளிர் குழு உறுப்பினர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் மகளிர்கள் அரசு விதிகளின்படியே கட்டாயம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்த வேண்டும். இதில் தவறுகள் இருக்கக் கூடாது.

வருகிற கல்வி ஆண்டு தொடக்கத்தில் இத்திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதால் அனைவரும் கவனமுடனும், பொறுப்புடனும் பணிகளை முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News