அரக்கோணம்- ஜோலார்பேட்டை வந்தே மெட்ரோ ரெயில்
- நிர்வாகம் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது
- ரெயில்வே அதிகாரிகள் தகவல்
அரக்கோணம்,
சென்னை கோட்டத்தில் அம்ரீத் பாரத் திட்டத்தின் மூலமாக 15 ரெயில் நிலையங்களில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அறிவிக்கப்பட்ட பட்டியலில் அரக்கோணம் இடம்பெற்றுள்ளது.
அதற்கான பணிகளை தொடங்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் வந்தே பாரத் ரெயிலும் அரக்கோணம் வழியாக இயக்கப்படுகிறது. இதுவரை பயணிகள் இந்த ரெயிலில் அமர்ந்து மட்டும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தது.
தற்போது வந்தே பாரத் ரெயிலில் படுக்கை வசதிகள் கொண்டதாகவும் மின்சார ரெயில்களுக்கு மாற்றாக இயக்குவதற்காக வந்தே மெட்ரோ ரெயில்கள் தயாரிப்பு பணிகளும் ரெயில்வே துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி அரக்கோணம்- ஜோலார்பேட்டை போன்ற நகரங்களை இணைக்கும் மின்சார ரெயில்களுக்கு மாற்றாக இயக்குவதற்காக வந்தே மெட்ரோ ரெயில் தயாரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயணிகள் சேவைக்காக இயக்கப்பட உள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்னக ரெயில்வே மண்டல பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினரும், அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்க தலைவருமான நைனா மாசிலாமணி கூறும்போது:-
வரலாற்று சிறப்பு வாய்ந்த ரெயில் நிலையமாக அரக்கோணம் உள்ளது. இங்கு 8 நடைமேடைகள் உள்ளன. பலதரப்பட்ட மக்கள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். ரெயில் நிலையத்தை மேம்படுத்த பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக ெரயிலுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு பெட்டிகள் எங்கு உள்ளது என்பதை அறிய மின்சாரத்தில் இயங்கும் கோச் பொசிஷன் போர்டு அமைக்கப்படாமல் உள்ளது.
இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படு கின்றனர். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது இவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். திருவள்ளூரில் இருந்து வரும் 3,4-வது அகல ரெயில் பாதைகள் குறுக்கும் நெடுக்கமாக உள்ளன.
மேல் பாக்கம் ரெயில் நிலையம் வெளிப்புறம் சிக்னல் பாயிண்ட் வரை பாதைகளை நேராக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.