உள்ளூர் செய்திகள்

ரூ.400 கோடியில் காலணி பூங்கா அமைக்கப்படும்

Published On 2022-06-30 10:32 GMT   |   Update On 2022-06-30 10:32 GMT
  • ராணிப்பேட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • 5267 பேருக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 71 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து புதிய கட்டிடங்களை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டம் ஆகும். கனிமவளங்கள் நிறைந்த மாவட்டம். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் தோல் ஏற்றுமதி உலகத்தையே ஈர்க்க கூடிய வகையில் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 மணி நேரத்தில் 187 டன் நெகிழி சேகரித்து சுவிட்சர்லாந்து நாட்டில் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்திருக்கிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் தோல் மற்றும் காலணி உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறது. பனப்பாக்கத்தில் ரூ.400 கோடி செலவில் 250 ஏக்கரில் சர்வ தேச காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் 20,000 பேருக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறிய 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். இதனால்தான் உங்கள் முன் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவது சிலருக்கு புரியவில்லை. நான் தான் அடுத்த முதல்அமைச்சர் என அலைந்து கொண்டிருக்கிறவர்கள் இன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எந்தெந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை பட்டியலிட்டு உங்கள் முன்னே கூறி வருகிறோம். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டாக தெரியும் என்பது போல சிலர் அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலின் விளம்பர பிரியராக இருக்கிறார் என கூறுகிறார்கள். எனக்கு எதற்கு விளம்பரம் இனிமேல் எனக்கு விளம்பரம் தேவையா?55 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன்.

நரிக்குறவர்கள், இருளர் இன மக்கள் வீடுகளுக்கு சென்றதால் அப்படி கூறுகிறார்கள். அந்த சந்திப்பிற்கு பிறகு எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நரிக்குறவர்கள் இருளர்கள் இன மக்கள் வீடுகளுக்கு சென்றதோடு எங்களுடைய கடமை முடியவில்லை. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 293 நரிக்குறவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 9600 இருளர் இன மக்கள் உள்ளனர். இதில் 5267 பேருக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 20 திருநங்கைகள் 9,522 மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

விளிம்பு நிலையில் உள்ள மக்களை தேடி சென்று அவர்களுடைய குறைகளை தீர்க்கிறோம்.

பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்குவது பல்லாயிரம் கோடி திட்டங்களை உருவாக்குவதற்கு இணையானதாகும். கடந்த ஆட்சியில் அரசு பள்ளிகளில் வழங்கக்கூடிய புத்தகப் பையில் முன்னாள் முதல்அமைச்சர்கள் படத்தை போட்டு விளம்பரம் செய்தார்கள். அந்த பைகள் இன்னும் மிச்சமாக உள்ளது. அவற்றை பயன்படுத்த வேண்டாம் என என்னிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதன் மூலம் ரூ.17 கோடி அரசுக்கு செலவு ஏற்படும்.

முன்னாள் முதல்அமைச்சர்கள் படம் இருந்தால் என்ன. அந்த பைகளை மாணவர்களுக்கு கொடுங்கள் என்று கூறினேன்.

விளம்பரம் எனக்கு எதற்கு ஏற்கனவே உள்ள புகழ் பெருமை போதும். திராவிட மாடல் ஆட்சி என்றாலே மு.க.ஸ்டாலின் முகம் தான் ஞாபகத்துக்கு வரும். பல மாநிலங்கள் ஒருங்கிணைந்தது தான் இந்தியா என்றால் என் குரல் தான் ஞாபகத்திற்கு வரும்.

27 சதவீத இட ஒதுக்கீடு என்றால் என் முகம் தான் ஞாபகத்திற்கு வரும். அரசு பஸ்சில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களுக்கு எனது முகம் தான் ஞாபகத்திற்கு வரும்.

அம்பேத்கர், பெரியார் பிறந்த நாளை சமூகநீதி சமத்துவ நாளாக கொண்டாடும்போது என் பெயர் தான் ஞாபகத்திற்கு வரும். நான் என்றால் ஸ்டாலின் மட்டுமல்ல நாம் அனைவரும் சேர்ந்ததுதான். என்றும் உங்களில் ஒருவன் நான்.அனைவரும் சேர்ந்தது தான் நான். நமக்கான ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவை சீரமைத்துக் கொண்டிருக்கிறோம்.அதுமட்டுமின்றி ஒளிமயமான எதிர்காலத்திற்காக எந்நாளும் செயல்படுகிறோம். என் சக்தியை மீறி உங்களுக்காக உழைப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன், நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத்(ராணிப்பேட்டை) ஹரிணி தில்லை(வாலாஜா) தேவி பென்ஸ்பாண்டியன் (ஆற்காடு) முஹம்மத் அமீன், நகரமன்ற துணை தலைவர்கள் கமலராகவன், ரமேஷ்கர்ணா, பவளகொடி சரவணன், குல்சார் அஹமத், வாலாஜா ஒன்றியக்குழு தலைவர்கள் சேஷா வெங்கட், புவனேஸ்வரி சத்யநாதன், அசோக் ஒன்றியக்குழு துணை தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஸ்ரீமதி நந்தகுமார், ரமேஷ், மாவட்ட அவைத்தலைவர் அசோகன், மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத்,வன்னிவேடு ஊராட்சிமன்ற தலைவர் கற்பகம் சக்திவேல்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சக்திவேல்குமார், மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணை தலைவர், ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், கோட்டாட்சியர் பூங்கொடி உள்பட அரசு அலுவலர்கள், அதிகாரிகள், திமுக பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் டி.ஆர்.ஓ குமரேஷ்வரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News