உள்ளூர் செய்திகள்

குழந்தை திருமணம் செய்தால் 2 ஆண்டு ெஜயில், ரூ.1 லட்சம் அபராதம்

Published On 2023-08-25 15:23 IST   |   Update On 2023-08-25 15:23:00 IST
  • கலெக்டர் வளர்மதி எச்சரிக்கை
  • 24 மணிநேர அவசர உதவி எண்ணை தொடர்புக்கொள்ள அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் கடந்த 19 மற்றும் 20-ந்தேதி ஆகிய 2 திருமண முகூர்த்த நாட்களில் மாவட்டத்திலுள்ள அரக்கோணம், சோளிங்கர், நெமிலி, காவேரிப்பாக்கம் ஆகிய வட்டாரங்களில் மொத்தம் 11 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களுக்கு குழந்தை திருமணத்தால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து ஆலோசனைகளும், அறிவுரையும் வழங்கப்பட்டது.

குழந்தை திருமணம் செய்தால் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் முன் ஜாமீனில் வெளிவர முடியாது என எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மீட்கப்பட்ட குழந்தைகள் தற்போது, பெற்றோர்களிடம் அறிவுரைகள் வழங்கி ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுமாயின் அக்குழந்தைகளை குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழந்தை தொழிலாளர்கள், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும் குழந்தைகள், குழந்தைத் திருமணங்களுக்கு ஆளாகும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், கொடுமைக்கு உள்ளாகும் குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவிட குழந்தைகளுக்கான 24 மணிநேர அவசர உதவி எண் சைல்டு லைன் -1098 க்கும், மேலும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் குறித்து பெண்கள் உதவி எண்-181 க்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News