உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் அருகே திருஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 51 ஜோடிகளின் திருமண அழைப்பிதழை வைத்து குடும்பத்துடன் வழிபாடு செய்தார்.

எடப்பாடி பழனிசாமியை நாகரீகமற்ற முறையில் பேசுவதா?-ஆர்.பி.உதயகுமார்

Published On 2022-12-24 07:59 GMT   |   Update On 2022-12-24 07:59 GMT
  • எடப்பாடி பழனிசாமியை நாகரீகமற்ற முறையில் பேசுவதா? என்று ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  • சிலர் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே திருஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 51 ஜோடிகளின் திருமண அழைப்பிதழை வைத்து குடும்பத்துடன் வழிபாடு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

முதன் முதலில் புரட்சித்தலைவி அம்மா ரூ.100 பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கினார்.அதனை தொடர்ந்து பொங்கலுக்கு கரும்பை அம்மா வழங்கினார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு, கரும்பு ஆகியவற்றை வழங்கினார்.

2021-ம் ஆண்டில் ரூ.2500 பொங்கல் பரிசு மற்றும் அரிசி, சர்க்கரை, கிஸ்மிஸ், முந்திரி ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றை வழங்கினார். அத்துடன் வேட்டி, சேலையும் வழங்கினார்.

பொங்கல் பரிசு என்பது மக்களுக்கு வாழ்வாதார திட்டமாகும். ஒரு கோடியே 86 லட்சம் பேருக்கு வேட்டிகளும், ஒரு கோடியே 86 லட்சம் பெண்களுக்கு சேலைகளும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பொங்கல் தொகுப்பின் மூலம் நெசவாளர்களும் பயன் பெறுவார்கள், மக்களும் பயன்பெறுவார்கள். அதே போல் கரும்பு வழங்கும்போது விவசாயிகளும் பயன்பெறுவார்கள், மக்களும் பயன் பெறுவார்கள்.

இந்த பொங்கல் தொகுப்பில் வேட்டி-சேலை திட்டத்தையும், கரும்பையும் இதில் அறிவிக்கவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு வெளி மார்க்கெட்டில் போதுமான விலை அவர்களுக்கு கிடைக்காது.

முதல்-அமைச்சர் அறிவிக்காதது கரும்பு விவசாயிகள் மத்தியில் இன்றைக்கு கண்ணீரை வரவழைத்து உள்ளது. அதேபோல் ஆயிரம் ரூபாய் முதல்வர் அறிவித்திருப்பது, யானைபசிக்கு சோ ளப்பொரி போன்றதாகும். அதேபோல் பொங்கல் தொகுப்பில் கிஸ்மிஸ், முந்திரி, ஏலக்காய் ஆகிய பொருள்கள் அனைத்தும் கொடுப்பது மரபு ஆகும் பொங்கல் பொருட்களை குறைத்து விட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதன் மூலம் மக்களின் பொங்கல் கொண்டாட்டத்திற்கு இந்த அரசு ஆதரவு அளிக்கவில்லை என்பது போல் உள்ளது.

இன்றைக்கு அம்மாவால் நியமிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தான் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

சிலர் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தை ஏழை, எளிய மக்களுக்காக புரட்சித்தலைவர் உருவாக்கினார். இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அம்மா நினைத்தார்கள்.

அம்மாவின் கனவை நனவாக்கும் வண்ணம் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.அதற்காக ஏச்சுகளையும், பேச்சுக்களையும், அவதூறுகளையும் சுமந்து தான் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்.

இந்த இயக்கத்தில் ஒன்னரை கோடி தொண்டர்களும் அவருக்கு பின்னால் தான் உள்ளார்கள். இதை பொறுக்க முடியாத சில பேர் இயலாமையால், விரக்தியால் வெளியேறி நாகரிமற்ற பேச்சை பேசுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News