சேதமடைந்துள்ள சோழர்கால பாசியம்மன் கோவில்.
சிதிலமடைந்து கிடக்கும் சோழர்கால பாசியம்மன் கோவில்
- தொண்டி அருகே சிதிலமடைந்து கிடக்கும் சோழர்கால பாசியம்மன் கோவிலை புனரமைத்து பாதுகாக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அவ்வாறான ஒரு இயற்கைத் துறைமுகமாக தொண்டி அருகில் உள்ள பாசிப்பட்டினம் கி.பி.875 முதல் கி.பி.1090 வரையிலான காலத்தில் இருந்துள்ளது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் பாசிப்பட்டினம் கிராமம் உள்ளது. இங்கு வெற்றிச் சின்னமாக சோழர்களால் கட்டப்பட்ட 850 ஆண்டுகள் பழமையான பாசியம்மன் கோவில் சிதிலமடைந்து உள்ளது.
இந்த கோவிலை புனர மைத்து பாதுகாக்க வேண்டும் என்று ராம நாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி தொல்லியல் தலைவர் ராஜகுரு கூறியதாவது:-
தமிழ்நாட்டின் மிக நீண்ட கடற்கரை கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில், ஓடைகள், ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் உள்ள உப்பங்கழிகள் மூலம் பல இயற்கைத் துறைமுகங்கள் உருவாகி உள்ளன. அவ்வாறான ஒரு இயற்கைத் துறைமுகமாக தொண்டி அருகில் உள்ள பாசிப்பட்டினம் கி.பி.875 முதல் கி.பி.1090 வரையிலான காலத்தில் இருந்துள்ளது.
இந்த ஊர் பாசியாற்றின் கரையில் உள்ளதால் இந்த பெயரை பெற்றுள்ளது. இதன் கடற்கரை அருகில் பிற்கால சோழர்களால் கட்டப்பட்ட பாசியம்மன் கோவில் உள்ளது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முன் மண்டபம், பலிபீடம் என்ற அமைப்பில் உள்ள இந்த கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கிலும் ஒரு வாசல் உள்ளது.
மதுரையை ஆண்டு கொண்டிருந்த பராக்கிரம பாண்டியனுக்கும், திருநெல்வேலியை ஆண்டு கொண்டிருந்த குலசேகரப் பாண்டியனுக்கும் மதுரையை ஆட்சி செய்வதில் நடந்த போரின்போது, கி.பி.1168ல் பராக்கிரமபாண்டியன் மகன் வீரபாண்டியனுக்கு ஆதரவாக வந்த இலங்கை பராக்கிரமபாகுவின் படையும், குலசேகரப் பாண்டி யனுக்கு ஆதரவாக வந்த 2-ம் ராஜாதிராஜ சோழன் படையும் தொண்டி பாசி பட்டினத்தில் போரிட்டதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்த போரில் சோழர் தோற்றனர். பின்பு நடந்த போர்களில் சிங்களப்படையை சோழர் வென்றனர்.
சோழநாட்டின் எல்லையான சுந்தர பாண்டியன்பட்டினம் முதல் தேவிபட்டினம் வரையிலான பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் முதலாம் ராஜராஜசோழன் காலம் முதல் சோழர்களின் ஆதிக்கம் இருந்துள்ளது. இந்த பகுதிகளில் சோழநாட்டு வீரர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிங்களப்ப டையிடம் தோற்ற பாசிப் பட்டினத்தில், தங்கள் வெற்றியின் அடையாளமாக எட்டுக்கைகளுடன் அமர்ந்த நிலையில் பாசியம்மனுக்கு கோவிலை கி.பி.1168க்குப் பின் சோழர்கள் எழுப்பியுள்ளனர்.
850 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலின் மேற்பகுதியில் மரங்கள் வளர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதை புனரமைத்து பாதுகாக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.