இருமேனி சாலையை சீரமைக்க கோரிக்கை
- இருமேனி சாலையை சீரமைக்க கோரி கலெக்டரிடம் மனு வழங்கினர்.
- மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இருமேனி ஊராட்சியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் சாலையை சீரமைக்க கோரி எஸ்.டி.பி.ஐ.கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு தொகுதி தலைவர் நவ்வர்ஷா தலைமையில் தொகுதிச் செயலாளர் நூருல் அன்வர், மாவட்ட செயலாளர் நஜ்முதீன், உச்சிப்புளி நகர் துணைத் தலைவர் சகுபர் சாதிக் ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில், ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இருமேனிக்கு செல்லக்கூடிய பிரதான சாலை, சுமார் 10 வருடங்களுக்கு மேலாக சீர் செய்யாமல் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. இந்த சாலை பழுதாக இருப்பதால், அவசர காலங்களில் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய முடியாத நிலை உள்ளது.
வாகன ஓட்கள் இரவு நேரங்களில் தடுமாறி கீழே விழும் நிலையில் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். இந்த சாலை சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர், மண்டபம் ஒன்றிய சேர்மன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர்களிடம் மனு அளிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, தாங்கள் போர்க்கால அடிப்படையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.