உள்ளூர் செய்திகள்
சேலத்தில் இன்று அதிகாலை மழை- 3 மணி நேரம் நீடித்தது
- சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
- சேலம் மாநகர் முழுவதும் குளிர்ந்த நிலையில் காணப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஏரிகள் நிரம்பியது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து கடந்த சில தினங்களாக மழை பெய்யாமல் வெயில் வாட்டியது.
தற்போது மார்கழி மாதம் என்பதால் இரவு நேரம் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்ககடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று அதிகாலை சேலம் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து இடைவிடாமல் பெய்தது. இந்த மழை 3 மணி நேரம் நீடித்தது. இதனால் மழைநீர் சாலைகளில் ஓடியது. இதையடுத்து சேலம் மாநகர் முழுவதும் குளிர்ந்த நிலையில் காணப்பட்டது.