பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தபோது எடுத்த படம்
விழாவில் மாஜிஸ்திரேட் ரெஹினாபேகம் வழக்குகளை விசாரித்த காட்சி
ஆர்.புதுப்பட்டி துலுக்க சூடாமணி அம்மன் கோவில் தேரோட்டம்
- ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோவில் உள்ளது.
- இந்த ஆண்டும் வழக்கம்போல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த் திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெற்று வருவது வழக்கம்.
இந்த ஆண்டும் வழக்கம்போல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. விழாவில் பக்தர்கள் வேப்பிலை அணிந்து உருளதண்டம் போட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.
சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இக்கோவில் திருவிழாவையொட்டி, ஆங்கிலேயர் காலத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றம் 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்றும் சிறப்பு நீதிமன்றம் நடந்தது.
ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரெஹினாபேகம் வழக்குகளை விசாரித்தார். அடி தடி, சிறு விபத்துக்கள், மது விற்பனை போன்ற 7 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு அபராதம் விதித்தார். இன்றும் சிறப்பு நீதிமன்றம் நடந்தது.