உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு உற்ற தோழனாக ஆசிரியர்கள் திகழவேண்டும் - கலெக்டர் பேச்சு

Published On 2022-09-08 12:08 IST   |   Update On 2022-09-08 12:08:00 IST
மாணவர்களுக்கு உற்ற தோழனாக ஆசிரியர்கள் திகழவேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்

புதுக்கோட்டை:

பொன்னமராவதி ஆதிகாலத்து அலங்கார மாளிகை நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு பெருமை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு நிர்வாக இயக்குனர் அ.ப.ஜெயபால் தலைமைவகித்தார்.வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன், நிர்வாக இயக்குனர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்தமிழ்ப்பாசறை அறங்காவலர் சந்திரன் அறிமுக உரையாற்றினார். கலெக்டர் கவிதா ராமு பங்கேற்று ஆசிரியர்களுக்கு பெருமை விருதுகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஆசிரியர் பணி மிகவும் உன்னதமான, போற்றத்தக்க பணியாகும். ஆசிரியர்கள் மாணவர்களின் வளர்ச்சிகண்டு பொறாமை கொள்வதில்லை. பெருமைப்படுபவர்கள். தன்னலமற்றவர்கள். மாணவர்களுக்கு உற்ற தோழனாக, ஆசிரியர்கள் திகழவேண்டும். வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகத்தில், சவால்கள் நிறைந்த உலகில் மாணவர்கள் கவனம் சிதறாமல் கல்வியில் சிறந்து விளங்க ஆசிரியர்கள் வழிநடத்தவேண்டும். மாணவர்களின் குடும்ப சூழ்நிலை மற்றும் திறன்களை அறிந்து ஊக்கப்படுத்தவேண்டும்.மாணவர்கள் குறித்து பெற்றோர்களின் எதிர்பார்ப்பினை, கனவினை ஆசிரியர்கள் நிறைவேற்றவேண்டும் என்றார்.

விழாவில் பொன்ன மராவதி மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சார்ந்த சீரிய பணி, சமூக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பெருமை விருது வழங்கப்பட்டது.

Tags:    

Similar News