தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மத்திய அரசை கண்டித்து சீனி கடை முக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கறம்பக்குடி ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் காத்தலிங்கம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சேசுராசு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் தேவையான கூடுதல் நிதி மத்தியஅரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தொழிலாளர்களுக்கு 200 நாட்களாக உயர்த்த வேண்டும், நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும், தொழிலாளர்களின் வருகை பதிவேட்டை காலை 9 மணி என மாற்றி அமைக்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்ட ஆன்லைன் வருகை பதிவேடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில விவசாய குழு உறுப்பினர் அரசப்பன் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.