பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
- சட்டசபையில் மானியக்கோரிக்கையின்போது அறிவிக்க வேண்டும்
- மாநில ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்
விராலிமலை,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது:-கோரிக்கை வைத்தால் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை என் மீது மக்களுக்கு உள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மனுக்கள் என்பது வெறும் காகிதங்கள் அல்ல. மனுக்களை நிறைவேற்றுவது நம் கடமை என அவர் தெரிவித்துள்ளார். அவர் மீது நம்பிக்கை வைத்து ஒரு லட்சம் மனுக்களை பகுதிநேர ஆசிரியர்கள் அனுப்பி வருகிறோம்.மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதல்-அமைச்சர் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வார் என எதிர்பார்ப்போடு உள்ளார்கள். 10 ஆண்டு பணி என்பதையும் கடந்து 12-வது ஆண்டாக அரசு பள்ளிகளில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறோம். பெரும்பாலோர் 50 வயதை கடந்து விட்டார்கள்.பணி நிரந்தரம் செய்தால்கூட சிலகாலம் தான் பணியாற்ற முடியும். ரூ.10 ஆயிரம் என்ற குறைந்த சம்பளத்தில் பணி பாதுகாப்பு இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம். தி.மு.க. 181-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற, முதல்வர் தான் ஆணையிட வேண்டும்.பட்ஜெட்டில் எதிர்பார்த்திருந்த நிலையில், மானியக்கோரிக்கைலாவது பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.