உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-04-10 13:42 IST   |   Update On 2023-04-10 13:42:00 IST
  • ஆலங்குடி அரசு மருத்து வமனையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
  • 25 செவிலியர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில் 16 பேரும் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நாள்தோறும் 800 முதல் 1000 நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் 100 படுக்கைகள் கொண்ட வசதியும் உள்ளது. தற்போது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் முயற்சியால் ஐ.சி.யு. வார்டு அமைக்கப்பட்டுள்ளது.இதில் உலகத்தரம் வாய்ந்த நர்ஸ் காலிங் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் குளிர்சாதன அறைக்குள் திடீர் நடுக்கம் ஏற்படும் நோயாளிகளுக்கு வெப்பத்தை வழங்கும் வகையில் ஹோல் பாடி வார்மர் என்னும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் காலம் காலமாக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வசதிகள் இல்லாமலே உள்ளது.இது குறித்து பல ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

. ஆனால் இதுவரை மருத்துவர்கள் பற்றாக்குறை நீக்கப்படவே இல்லை. சுமார் 12 மருத்துவர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 5 மருத்துவர்களும் 25 செவிலியர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில் 16 பேரும் பணிபுரிந்து வருகின்றனர்.இதனால் அனைத்து வசதிகளும் இருந்தும் போதுமான சிகிச்சையை இப்பகுதி மக்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே இப்பகுதி மக்கள் அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வகையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடியாக நியமிக்குமாறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Tags:    

Similar News