உள்ளூர் செய்திகள்

தோட்டக்கலைப்பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Published On 2022-11-04 14:44 IST   |   Update On 2022-11-04 14:44:00 IST
  • தோட்டக்கலைப்பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் எடுக்கப்பட்டுள்ளது
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை காலங்களில்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கா வண்ணம் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதற்கான ஆயத்த நிலை ஏற்பாடுகளை செய்து, பயிர் களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

பசுமைக்குடில்கள் மற்றும் நிழல்வலைக்குடிகளில் பயிர் செய்யும் விவசாயிகள் பருவமழை காலத்தில் அதன் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைத்து கட்டுவதன் மூலம் சேதத்தை தடுக்கலாம்.

மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும். தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் வேர்ப்பகுதி நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். கனமழை, காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர்பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும்.

வாழையில் சேதத்தை தடுக்க, மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும். நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News