- புதுக்கோட்டை கலெக்டர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது
- விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கிராம ஊராட்சிமன்றத் தலை வர்களுடன் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டு கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப் புறங்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, மின்வசதி, குடியிருப்புகள், மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.எனவே ஊராட்சிமன்றத் தலைவர்கள் அனைவரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை முறையாக தங்களது பகுதிகளில் செயல்படுத்தி மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும். மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் மற்றும் தாட்கோ உள்ளிட்ட துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.ஊராட்சிமன்றத் தலைவர்கள், தங்களது ஊராட்சிகளில் மக்களி டையே ஜாதி, மதம் பேதமின்றி அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கே.பழனிச்சாமி மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.