உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை

Published On 2022-09-29 09:44 GMT   |   Update On 2022-09-29 09:44 GMT
  • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
  • புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 46 வயது நபருக்கு ஒரு ஆயுள் மற்றும் ஆறாண்டு சிறை தண்டனையும், இரண்டு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கவரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேலு (வயது 46). இவர் கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் உன் குடும்பத்தை கொன்று விடுவேன் என்று மிரட்டி அதை பயன்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில்சிறுமி கர்ப்பமானார். இதனால் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றங்கள் உண்டானதை உணர்ந்த பெற்றோர், அவரிடம் விசாரணை செய்த போது சிறுமி நடந்துவற்றை கூறியுள்ளார். பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்த போது, கர்ப்பமாக இருந்தது உறுதியானது.

இதனையடுத்து இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் விராலிமலை காவல் துறையினர் குழந்தைவேலுவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரனை செய்த நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் குழந்தைவேலு மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஒரு ஆயுள் மற்றும் ஆறாண்டு சிறை தண்டனையும் இரண்டு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7.50 லட்சம் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இதனை அடுத்து குற்றவாளி குழந்தைவேலு காவல்துறை பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்

Tags:    

Similar News