- மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது
- தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்து, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அவர் பேசும் போது,பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறவுள்ள அரசு பொதுத் தேர்வுகள் தொடர்பாக தேர்வு ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுத் தேர்வினை 21,031 மேல்நிலை இரண்டாமாண்டு மாணவர்களும், 18,617 மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களும், 25,081 பத்தாம் வகுப்பு மாணவர்களும் எழுத உள்ளனர். தேர்வு நாளன்று ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தடையில்லா மின்சாரம், குடிநீர்வசதி, சுகாதார வசதிகள், அனைத்து தேர்வு மையங்களுக்கும் பேருந்து வசதி, கட்டுக்காப்பு மையங்கள் மற்றும் விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள குறித்து ஆய்வு செய்து முன்னேற்பாட்டு வசதிகள் செய்திட வேண்டும்.அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் அந்தந்த பகுதியில் உள்ள தேர்வு மையங்களாக செயல்படும், பள்ளிகளில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணியாளர்களை கொண்டு பள்ளி வளாகத்தை தூய்மை செய்திட வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் அவரவர்களுக்கு கூறப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி தேர்வினை சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாச்சியர் முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.