பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணிகள் தொடங்கியது
- தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற உள்ளது
- அகழ்வாராய்ச்சி பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
புதுக்கோட்டை,
தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டம் தொன்மை சின்னங்கள் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பொற்பனைக்கோட்டை சங்ககால தொன்மை மிக்க இடமாக கருதப்படுகிறது. இங்கு கோட்டை கொத்தளங்கள், அகழிகள் உள்ளன. கோட்டை சுவரில் 4 இடங்களில் வாசல்கள், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், பல்வேறு இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.இவ்விடத்தை அரசு அகழாய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் தொடர்ந்த வழக்கில், ஆய்வு செய்ய அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2021 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில், இவ்விடத்தை அகழாய்வு செய்வதற்கு அனுமதி கோரி அரசுக்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் கோரிக்கை விடுத்திருந்தது. அதனடிப்படையில் இப்பல்கலைக்கழகத்துககு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் பொற்பனைக்கோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியது. இந்தப் பணியை தமிழ்நாடு நிதித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா முத்துராஜா எம்.எல்.ஏ., கலெக்டர் கவிதா ராமு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.