மின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
- பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது
- மின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது
புதுக்கோட்டை:
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின் சேமிப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விழாவில் மின் சேமிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் அறந்தாங்கியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணியானது கட்டுமாவடி முக்கம், பெரியகடைவீதி, வீரமாகாளியம்மன் கோவில் வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. மின்சாரத்தை எவ்வாறு அளவோடு பயன்படுத்துவது, நட்சத்திர குறியீடு கொண்ட மின் உபகரணங்களை பயன்படுத்துவதன் மூலம் எவ்வாறு மின் சிக்கனம் செய்வது குறித்த விழிப்புணர்வு பேரணி வாயிலாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. பேரணியில் செயற்பொறியாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர்கள் சுப்பிரமணியன், லூதூர்சகாயராஜ், பழனிவேல், தனபால் உள்ளிட்ட அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.