28 ஊராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் குடிநீர் திட்ட பணிகள் தொடக்கம்
- 28 ஊராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது
- ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் தகவல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சாதாரண ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், 28 ஊராட்சிகளுக்கான ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதி குறைநிறைகளை முன்வைத்தனர். அதற்கு அந்தந்த துறை அதிகாரிகள் பதிலளித்தனர்.
கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான பரணி கார்த்திகேயன் கூறுகையில்,
மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 28 ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம், கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட முதல்வர், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளார். பெருமருதூர் வெள்ளாற்றுப் படுகையிலிருந்து மும்பாலை வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 28 ஊராட்சிக்கும் தண்ணீர் கிடைக்கும் என தெரிவித்தார்.
மேலும் இப்பகுதியில் போதிய பருவமழை இல்லாததால் விவசாயம் பொய்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கணக்கெடுத்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதே போன்று ஆவுடையார் கோவில் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் மக்கள் குறைகள் விவாதிக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட்டது.