அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா கூட்டம் தி.மு.க. இந்து மதத்திற்கு எதிரானது அல்ல-அமைச்சர் ரகுபதி பேச்சு
- தி.மு.க. இந்து மதத்திற்கு எதிரானது அல்ல என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
- தமிழகத்தில் தலைவர் தளபதி ஆட்சியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்பட்டுள்ளது என கூறினார்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்கணேசன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் பேசுகையில்,திராவிட மாடல் ஆட்சி என்றால் எல்லோருக்கும் எல்லாம் என்பதாகும் ஆனால் சிலருக்கு அது கசப்பாக தெரிகிறது. திராவிட மாடல் ஆட்சி என்பது மோடியை போன்று 10 பேருக்காக ஆட்சி இல்லை, மாறாக எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்பது. இன்றைக்கு தமிழகத்தில் தலைவர் தளபதி ஆட்சியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்ட பிரச்சனைகள் நிலவி வருகிறது. ஆனால் தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளை போல் பழகி வருவருவதால் தமிழகம் அமைதி பூங்காவாகவும், முதன்மை மாநிலமாகவும் திகழ்கிறது .தி.மு.க. ஒன்றும் இந்து மதத்திற்கு எதிரானது அல்ல, அனைத்து மதத்திற்கும் பொதுவானது அதற்கு எடுத்துக்காட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாதத்திற்கு ஒரு முறை ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று வருகிறார் .இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன், பேராசிரியர் பெருந்தகை குறித்து சிறப்புரையாற்றினார். அதே போன்று அறந்தாங்கி வடக்கு ஒன்றியம் சார்பில் ராஜேந்திரபுரத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைக் கழக பேச்சாளர் ஆடுதுறை உத்ராபதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.