உள்ளூர் செய்திகள்

களைக்கொல்லிகளை கவனமாக பயன்படுத்த ஆேலாசனை

Published On 2023-04-19 14:06 IST   |   Update On 2023-04-19 14:06:00 IST
  • புதுக்கோட்டை விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குனர் ஆலோசனை
  • மகசூல் பாதிக்காதவாறு பயன்படுத்த அறிவுரை

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-மகசூல் பாதிக்காதவாறு களைக்கொல்லிகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.களைக்கொல்லிகளை பொறுத்தவரை களை முளைக்கும் முன் தெளிக்கும் மருந்துகள், களைகள் முளைத்தபின் தெளிக்கும் மருந்துகள் என இரு வகைகளாக உள்ளன. இது மட்டுமல்லாமல் பயிர்களுக்கு உகந்தவாறு தேர்வு திறன் உள்ள களைக்கொல்லிகள் உள்ளன.அனைத்து வகையான பயிர்கள் மற்றும் களைச்செடிகள் ஆகியவற்றை அழிக்கக்கூடிய வகையில் உள்ள களைக்கொல்லிகள் தேர்வு திறனற்ற களைக்கொல்லிகள் எனப்படும். இவற்றை பயன்படுத்தும்போது அதிக கவனம் செலுத்திட வேண்டும்.விவசாயிகள் களைக்கொல்லிகளை தேர்தெடுப்பது என்பது மிகவும் முக்கியமான செயலாகும். இதற்கு சம்பந்தப்பட்ட பூச்சி மருந்து விற்பனை நிலைய பொறுப்பாளர்கள் அல்லது தங்கள் பகுதி விரிவாக்க பணியாளர்கள் ஆகியோரிடம் பரிந்துரை பெற்று கீழ்க்கண்ட வழிமுறைகளையும் கடைபிடித்து களைக்கொல்லிகளை தெளிக்கலாம்.கண் கண்ணாடிகள், முகக்கவசம், கையுறைகள் பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை அணிந்து மருந்து தெளிக்க வேண்டும். வாங்குவதற்கு முன் களைக்கொல்லிகளின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.பரிந்துரைக்கப்பட்ட பயிர்களுக்கு ஏற்ப மட்டுமே களைக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும். களைக்கொல்லிகளை சரியான நேரத்தில், சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.வயலில் நிலவும் வறட்சி, ஈரப்பதம் போன்றவற்றை கருத்தில் கொண்டு களைக்கொல்லிகளை இட வேண்டும்.களைக்கொல்லிகள் தெளிக்க நாப்சாக் தெளிப்பான் பயன்படுத்தப்பட வேண்டும். காற்று வீசும் போது களைக்கொல்லிகளைப் பயன்படுத்தக்கூடாது. காற்று அதிகரிக்கும்போது மருந்து தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும். காலை மற்றும் மாலை வேலைகள் பொதுவாக களைகொல்லி தெளிக்க சிறந்த நேரமாகும். களைக்கொல்லிகளை பயன்படுத்திய பகுதிகளில் நடக்கக் கூடாது. தெளிப்பிற்கு தேவையான அளவு மட்டும் களைக்கொல்லி கலவையினை தயார் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News