உள்ளூர் செய்திகள்

3 மாதங்களில் 33 குழந்தை திருமணங்கள்

Published On 2022-09-06 11:47 IST   |   Update On 2022-09-06 11:47:00 IST
  • 3 மாதங்களில் 33 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
  • ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா, நாணயக் கண்காட்சி மற்றும் கலை இலக்கிய நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

33 குழந்தை திருமணங்கள்

இவ்விழாவில் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தின் தலைவர் கே.சதாசிவம் பேசியதாவது:

குழந்தை திருமணம், குழந்தை கடத்தல், பிச்சை எடுத்தல், பள்ளியில் இருந்து இடைநிற்றல் போன்ற சிறுமிகளுக்கு எதிரான அநீதிகள் தடுக்கப்பட வேண்டும். அதற்கான பணிகளையும், அவர்களுக்கான மறுவாழ்வு பணிகளையும் அரசு செய்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 33 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. நம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் பொன்னமராவதி, விராலிமலை, அன்னவாசல், அறந்தாங்கி உள்ளிட்ட வட்டாரங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் குழந்தை திருமணங்கள் நடப்பதாக, குழந்தைகள் பாதுகாப்புக்கான கட்டணமில்லா எண் 1098-க்கு புகார்கள் வருகின்றன.

விழிப்புணர்வு

மாவட்டம் முழுவதும் மாணவ, மாணவிகளிடையே ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதோடு, அத்தகைய குற்ற ங்களில் ஈடுபடுவோர் மீதான அரசின் நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தல் தேவைப்படுகிறது. பொதுவாக 13-ல் இருந்து 19-வயது வரை கல்வியை தவிர வேறு எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல், கவனச்சிதறல்களுக்கு ஆளாகாமல் மாணவிகள் இருக்க வேண்டும். சிறுமிகளுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் 1098- எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்போரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் பாக்கியராஜ் தலைமயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஜானகி, கிராம நிர்வாக அலுவலர் ராஜா, அறிவொளி கருப்பையா, அறிவியல் இயக்க நிர்வாகி பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனனர்.

Tags:    

Similar News