உள்ளூர் செய்திகள்

புத்தக திருவிழா விழிப்புணர்வுக்காக புதுக்கோட்டையில் ஒரே நேரத்தில் 3 லட்சம் பேர் புத்தகம் வாசிப்பு

Published On 2023-07-07 13:37 IST   |   Update On 2023-07-07 13:37:00 IST
  • புத்தக திருவிழா விழிப்புணர்வுக்காக புதுக்கோட்டையில் ஒரே நேரத்தில் 3 லட்சம் பேர் புத்தகம் வாசித்தனர்
  • புத்தக திருவிழா 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிருவாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து வரும் 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ள 6-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, 3 லட்சம் பேர் பங்கேற்ற 'புதுக்கோட்டை வாசிக்கிறது" நிகழ்வினை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா துவக்கி வைத்து, மாணவிகளுடன் அமர்ந்து புத்தகம் வாசித்தார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுமார் 3 லட்சம் பள்ளி, கல்லூரி, மகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் பொது இடங்களில் 'புதுக்கோட்டை வாசிக்கிறது" என்ற மாபெரும் நிகழ்ச்சி மாவட்ட முழுவதும் நேற்று காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு மணி நேர நிகழ்வு துவக்கி வைக்கப்பட்டது. இப்புத்தகத் திருவிழாவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மக்களின் பார்வைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட அரங்கங்களில் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளது.

இந்த புத்தகத் திருவிழாவில் அறிஞர்கள், சொற்பொழிவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் சொற்பொழிவாற்றவும் உள்ளனர்.புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புத்தகம் படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் 'புதுக்கோட்டை வாசிக்கிறது" என்ற நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புத்தக வாசிப்பு என்பது கற்பனை உலகத்தை நிஜமாக்குவதற்கு நம்மிடையே ஆர்வத்தை தூண்டுவதாகும்.

எனவே மாணவர்கள் அனைவரும் படிக்கும் பழக்கத்தை சிறு வயது முதலே பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் நாம் என்னவாக போகிறோம் என்பதற்கான வழிவகையினை ஏற்படுத்தும். புத்தகம் படிப்பின் மூலம் நம்மிடையே வளரும் அறிவு செல்வத்தின் மூலம் இச்சமுதாயத்திற்கு பயன்தரக்கூடிய மக்களாக வளர வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.கருணாகரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்செல்வி, நூலக அலுவலர் சிவக்குமார், புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், பள்ளித் துணை ஆய்வாளர் குருமாரிமுத்து, வேல்சாமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் .சாலை செந்தில், கவிஞர் தஙகம் மூர்த்தி, டாக்டர் சலீம், அறிவியல் இயக்கம் பாலகிருஷ்ணன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, விவசாய சங்கம் தனபதி, மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.





Tags:    

Similar News