உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் தன்னார்வலர்களுக்கு விருது வழங்கப்பட்ட காட்சி. 

அரசு பள்ளிகளை பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மேம்படுத்த வேண்டும் - ஆற்றல் அறக்கட்டளை அசோக்குமார் பேச்சு

Published On 2023-01-27 12:28 IST   |   Update On 2023-01-27 12:28:00 IST
  • பொதுமக்கள் அரசு பள்ளி தரம் குறைவாக இருக்கும் என்று கருத வேண்டாம்.
  • 25 தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கு ஆற்றல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது

தாராபுரம் :

74-வது குடியரசு தினத்தையொட்டி ஆற்றல் அறக்கட்டளை மற்றும் வேர்கள் அமைப்பு சார்பில் தாராபுரம் தேன்மலர் பள்ளி விளையாட்டு அரங்கத்தில் "பிறர் நலன் சிந்திப்போர் சந்திப்பு நிகழ்ச்சி" மற்றும் தாராபுரம் பகுதியில் சமூக சமுதாய பணியில் முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த நிர்வாகிகளுக்கு ஆற்றல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

விழா குறித்து சிறப்பு விருந்தினரும் ஆற்றல் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான ஆற்றல் அசோக் குமார் பேசியதாவது:- பொதுமக்கள் அரசு பள்ளி தரம் குறைவாக இருக்கும் என்று கருத வேண்டாம். அரசு ஆசிரியர்கள் திறமை மிக்கவர்கள்.

அரசு பள்ளிகளில் எங்களை போன்ற சமூக நல அமைப்புகளை ஒருங்கிணைத்து பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.ஆகவே பொதுமக்கள் அரசு பள்ளிகளை ஒன்று சேர்ந்து மேம்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் அரசு பள்ளிக்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்வதற்கு தயாராக உள்ளோம் .

உங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் தேவையான வசதிகள் குறித்து தெரிவித்தால் செய்து தரப்படும். மேலும் 62 ஊராட்சிகளில் 100 சமுதாயக்கூடங்கள் கட்டுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். நீங்கள் அவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில் தாராபுரம் ,மூலனூர் ,குண்டடம் உள்ளிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு சேவை செய்யும் 2500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு யோஷாபாத் சிம்மர் கனி ராம், கோபால் ரத்தினம் , ஆற்றல் அசோக் குமார் ஆகியோர் பங்கேற்று ஆற்றல் விருதுகளை வழங்கி கவுரவித்தனர். 25 தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கு ஆற்றல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது

நிகழ்ச்சியில் மூலனூர் வேர்கள் அமைப்பு நிர்வாகி சிவராஜ் வரவேற்று பேசினார்.தாராபுரம் நிர்வாகி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஸ்ரீ ராம் ரகுபதி. முன்னிலை வகித்து பேசினார். முடிவில் வேர்கள் அமைப்பின் நிர்வாகி ராஜசேகரன் நன்றி கூறினார்.விழாவில் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News