பழங்குடியினர் விடுதலை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- ஆந்திரா மாநில சித்தூர் போலீசார் சித்ரவதை செய்து, கொடுமைப் படுத்தியவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
- பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்களுக்கும், ஆண்களுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா புளியாண்டப்பட்டியைச் சேர்ந்த குறவர் இன மக்களை, ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசார் சித்ரவதை செய்ததாக கண்டித்து, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், குறிஞ்சி தமிழர் விடுதலை இயக்கம், பழங்குடியினர் விடுதலை இயக்கம் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு குறிஞ்சி விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் தேவ கலையழகன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் முருகன் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் கனியமுதன், மாநில துணை செயலாளர் அசோகன், மேற்கு மாவட்ட செயலாளர் மாயவன், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், புளியாண்டப்பட்டியைச் சேர்ந்த குறவர் இன பெண்களை ஆந்திரா மாநில சித்தூர் போலீசார் சித்ரவதை செய்து, ஆண்களிடம் 4 கிலோ தங்கத்தைக் கேட்டு கொடுமைப் படுத்தியவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்களுக்கும், ஆண்களுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். 8 நபர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். குறவர் இனத்தின் மீது தொடரும் போலீசாரின் அடக்குமுறையை தமிழக அரசும், காவல்துறையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.