பட்டா கேட்டு வீடுகளில் கருப்புக்கொடிகளை கட்டி போராட்டம் நடத்திய மக்களை படத்தில் காணலாம்.
பட்டா கேட்டு வீடுகளில் கருப்புக்கொடிகளை கட்டி போராட்டம்
- பலமுறை அரசை வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
- வீடுகளில் கருப்புகொடிகளை கட்டி பட்டா கோஷங்களை எழுப்பினர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே கோலட்டி ஊராட்சிக்குட்பட்டது பிக்கனப்பள்ளி கிராமம்.
இந்த கிராமத்தில் 300-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. 4 தலைமுறைகளாக வசித்துவரும் நிலையில் பலருக்கும் பட்டா வழங்கப்பட்டு அடிப்படை வசதிகள் மேம்படுத்தி இருந்தாலும் 45 குடியிருப்புக்கள் அருகே உள்ள 10 வீடுகள் என 55 வீடுகளுக்கு இன்று வரை பட்டா வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
இதுக்குறித்து ஒசூர் திமுக எம்எல்ஏ, தளி கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஆகியோர் மூலம் மாவட்ட ஆட்சியரை பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். ஒசூர் சார் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தும் இதற்கான பதிலோ, பட்டா வழங்க இத்தனை நாட்களாகும் என்றோ எவ்வித பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டனர்.
பலமுறை அரசை வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஊராட்சி மன்ற தலைவர் நாராயணப்பா தலைமையில் கிராம மக்கள் அரசின் கவனத்தை ஈர்க்க வீடுகளில் கருப்புகொடிகளை கட்டி பட்டா வழங்க வேண்டும் என்கிற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுக்குறித்து ஊராட்சி மன்ற தலைவர் நாராயணப்பா கூறுகையில்:-
சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை கொண்டாடி முடித்துவிட்டோம் ஆனால் எங்கள் கிராமத்தில் 55 வீடுகளுக்கு சுதந்திரம் இல்லை வீடுகளுக்கு பட்டா இல்லாததால் ஊராட்சி சார்பில் தொகுப்பு வீடுகள் கட்ட ஒதுக்கீடு செய்ய முடியவில்லை, வீடு கட்ட வங்கி கடன்கள் பெற முடியவில்லை என்கிற சூழலில் இருந்து வருகிறார்கள்
தமிழக அரசு இதற்கான நடவடிக்கை மேற்க்கொள்ளாவிட்டால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்க்கொள்ள இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.