உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கூடத்தின் முன்பக்க கதவில் சீல் வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

ஈரோட்டில் ரூ.4 கோடி வாடகை பாக்கி செலுத்தாததால் தனியார் பள்ளிக்கு 'சீல்'

Published On 2023-05-24 03:17 GMT   |   Update On 2023-05-24 03:17 GMT
  • இந்த பள்ளிக்கூடம் 1998-ம் ஆண்டு முதல் வாடகைக்கு இயங்கி வருகிறது.
  • பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது.

ஈரோடு :

ஈரோடு சம்பத் நகரில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடம் தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் 1998-ம் ஆண்டு முதல் வாடகைக்கு இயங்கி வருகிறது.

பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டு சில ஆண்டுகள் மட்டுமே வாடகை செலுத்திய பள்ளிக்கூட நிர்வாகம் அதன் பின்னர் வாடகை செலுத்தவில்லை. இதனால் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் பலமுறை வாடகை கேட்டும் பள்ளிக்கூட நிர்வாகம் செலுத்தவில்லை.

இதற்கிடையில் வீட்டு வசதி வாரியம் கூடுதல் தொகை நிர்ணயித்திருப்பதாக கூறி பள்ளிக்கூட நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்ததுடன் இதில் அரசே முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. மேலும் ரூ.3 கோடியே 90 லட்சம் வாடகை பாக்கி தொகையை செலுத்த வீட்டு வசதி வாரியம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியது.

எனினும் பள்ளிக்கூட நிர்வாகம் வாடகை பாக்கியை செலுத்தவில்லை. இதனால் இடத்தை கையகப்படுத்தும் நோக்கில் நேற்று பள்ளிக்கூடத்துக்கு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் சென்றனர். பின்னர் பள்ளியின் முன்பக்க கதவை பூட்டி 'சீல்' வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

இதன் காரணமாக இந்த பள்ளிக்கூடத்தில் படித்து வரும் மாணவ -மாணவிகளின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News