உள்ளூர் செய்திகள்

வானூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் பிஸ்கட் தொழிற்சாலை ஊழியர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்தபடம்.

வானூர் அருகே தனியார் பிஸ்கட் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-06-09 13:07 IST   |   Update On 2023-06-09 13:07:00 IST
  • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 3 ஷிப்டுகளில் பணி செய்து வருகின்றனர்.
  • தொழிலாளர்கள் யாரும் உள்ளேயும் செல்ல முடியவில்லை. வெளியேயும் வரமுடியவில்லை.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே புளிச்சப்பள்ளம் பகுதியில் தனியார் பிஸ்கட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 3 ஷிப்டுகளில் பணி செய்து வருகின்றனர். தொழிலாளர்களுக்காக பல்வேறு தொழிற்சங்கங்கள் இயங்கி வருகிறது. இதில் தே.மு.தி.க. தொழிற்சங்கமும் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் உள்ளவர்களுக்கு அடிக்கடி ஷிப்ட் மாற்றுவது, செக்ஷன் மாற்றுவது போன்ற நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், இதே நிலை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளிவில் தே.மு.தி.க. தொழிற்சங்க தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் ஊழியர்கள் தொழிற்சாலை வாயிலில் கூடினர். தங்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே, மற்ற ஊழியர்கள் வேலைக்கு செல்லவேண்டுமென கூறி மறியலில் ஈடுபட்டனர். இதனால் தொழிலாளர்கள் யாரும் உள்ளேயும் செல்ல முடியவில்லை. வெளியேயும் வரமுடியவில்லை. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தே.மு.தி.க. மாவட்ட தொழிற்சங்க செயலாளர் அருள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அதேபோல வானூர் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, நிர்வாகத்துடனும், தே.மு.தி.க. நிர்வாகிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இது தொடர்பாக விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. இதனை அடுத்து தே.மு.தி.க. தொழிற்சங்கத்தினர் மறியலை கைவிட்டு வேலைக்கு சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News