உள்ளூர் செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக சுவரொட்டி: பா.ஜ.க. கவுன்சிலர் மீது வழக்கு

Published On 2025-04-25 11:21 IST   |   Update On 2025-04-25 11:21:00 IST
  • பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் ரோந்து தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
  • சுனில் அரசு நாகர்கோவில் மாநகராட்சியில் பா.ஜ.க. கவுன்சிலராகவும், வடக்கு மண்டல தலைவராகவும் உள்ளார்.

நாகர்கோவில்:

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் ரோந்து தீவிரபடுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் காஷ்மீர் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாகர்கோவில் நகர பகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்கள் பொது இடத்தில் அமைதியை கெடுக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ளதாக வடசேரி இன்ஸ்பெக்டர் லட்சுமணன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நாகர்கோவில் கேசவ திருப்பாபுரத்தை சேர்ந்த முருகன், வடசேரி வெள்ளாளர்கீழ தெருவை சேர்ந்த சுனில் அரசு (வயது32) ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுனில் அரசு நாகர்கோவில் மாநகராட்சியில் பா.ஜ.க. கவுன்சிலராகவும், வடக்கு மண்டல தலைவராகவும் உள்ளார். இவர் மீது கடந்த வாரம் தான் வடசேரி பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டின் பெயர் பலகை உடைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். முருகன் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.

Tags:    

Similar News