மதுரவாயல் பகுதியில் கைவரிசை- 100 வழக்கில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது
- கைதான காளிதாஸ் மதுரவாயல் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்து உள்ளார்.
- காளிதாஸ் வயதானவர் என்பதால் அவர் மீது போலீசாருக்கு பெரிய அளவில் சந்தேகம் ஏற்படவில்லை.
போரூர்:
மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த வர் ராஜதுரை. அதே பகுதியில் "போட்டோ ஸ்டூடியோ" கடை நடத்தி வருகிறார்.
கடந்த 11-ந் தேதி ஸ்டூடியோவின் ஷட்டர் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள கேமரா மற்றும் ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில் முதியவர் ஒருவர் கொள்ளையில் ஈடுபடுவது பதிவாகி இருந்தது.
இதனை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் காளிதாஸ் (வயது55) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கேமரா பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான காளிதாஸ் மதுரவாயல் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்து உள்ளார்.
ஷட்டர் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பதில் கைதேர்ந்த காளிதாஸ் மீது ஆந்திரா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
காளிதாஸ் வயதானவர் என்பதால் அவர் மீது போலீசாருக்கு பெரிய அளவில் சந்தேகம் ஏற்படவில்லை. இதனால் அவர் போலீசில் சிக்காமல் இருந்தார். கண்காணிப்பு கேமரா காட்சியால் பிடிபட்டுள்ள அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.