உள்ளூர் செய்திகள்

பூக்குழி திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கிய போது எடுத்த படம்.

சிவகிரி அருகே திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

Published On 2023-07-30 08:50 GMT   |   Update On 2023-07-30 08:50 GMT
  • கோவிலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டக படிதாரர்கள் சார்பில் திருவிழா நடைபெற்றது.
  • விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

சிவகிரி:

சிவகிரி அருகே விஸ்வநாதபேரி திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டக படிதாரர்கள் சார்பில் திருவிழா நடைபெற்றது. திரவுபதி அம்மன் திருக்கல்யாண அலங்காரம், கனி பறித்தல், அர்ச்சுனன் தபசு, பூப்பறித்தல், அரவான் களப்பொலி, துச்சாதனன் பலி வாங்குதல் ஆகிய வடிவங்களில் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 9-ம் திருநாளான நேற்று சேனைத்தலைவர் சமுதாயத்தினர் சார்பில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.

காலையில் திரவுபதி அம்மன் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழி திடலில் வேதபராயண முறைப்படி அக்னி வளர்க்கப்பட்டது.

தொடர்ந்து பகலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு திரவுபதி அம்மன், அர்ச்சுனன், கிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

பின்னர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மாலை 6.30 மணிக்கு பூக்குழி திடலை அடைந்த உடன் பூசாரி மணிகண்டன் பூக்குழி இறங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள், விழா கமிட்டியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News