உள்ளூர் செய்திகள்

பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் ரூ.300 கோடியில் 30 மெட்ரோ ரெயில் பெட்டிகள் வாங்க திட்டம்

Published On 2023-10-07 05:12 GMT   |   Update On 2023-10-07 05:12 GMT
  • 2028-ம் ஆண்டில் பயணிகளின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மெட்ரோ ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது.
  • பல தரப்பு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்பட்டு கூடுதல் ரெயில்களை இயக்க அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுவதால் நெரிசல் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடிகிறது. முதல் கட்ட மெட்ரோ ரெயில்கள் 2 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

தற்போது சராசரியாக தினமும் 2½ லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர். அரசு அலுவலகங்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மெட்ரோ ரெயிலை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

54 கி.மீ. தூரமுள்ள முதல் கட்ட மெட்ரோ ரெயில் சேவையில் 4 பெட்டிகளை கொண்ட 54 ரெயில்கள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 லட்சத்து 48 ஆயிரம் பயணிகள் பயணம் செய்தனர்.

நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நெரிசல் ஏற்படுகிறது. 2028-ம் ஆண்டில் பயணிகளின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மெட்ரோ ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது.

கூடுதலாக ரெயில்கள் வாங்கி சேவையை அதிக ரித்தால் தான் நெரிசலை குறைக்க முடியும் என ஆய்வு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் 6 கார்களை கொண்ட 28 ரெயில்களை ரூ.2820 மதிப்பீட்டில் வாங்க திட்ட மிடப்பட்டு உள்ளது. தற்போது 6 பெட்டிகளை கொண்ட 5 ரெயில்களை வாங்க முடிவு செய்துள்ளது.

இதற்காக ரூ.300 கோடி கடன் வாங்குகிறது. இதற்கான ஆவண பணிகள் தொடங்கி உள்ளன. கடன் வாங்கக்கூடிய டெண்டர் இறுதி செய்யப்பட்டு உள்ளது. 30 ரெயில் பெட்டிகளை வாங்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் நடவடிக்கையினை மேற் கொண்டு வருகிறது.

இது குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறுகையில், தற்போது உள்ள 4 பெட்டிகள் கொண்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை சேர்க்க முடியாது. ஏன் என்றால் இந்த செயல்முறை தினசரி செயல்பாடுகளை பாதிக்கும். பல தரப்பு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்பட்டு கூடுதல் ரெயில்களை இயக்க அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது" என்றார்.

Tags:    

Similar News