பேட்டை நுண்ணறிவு போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்
- பூலம்மாளுக்கும், ராஜதுரைக்கும் இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது.
- சில நுண்ணறிவு போலீசார் தங்களது சொந்த வியாபார வேலைகளில் தான் அதிக ஆர்வம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பேட்டை போலீஸ் நிலைய நுண்ணறிவு போலீசாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மாநகர ஆயுதப்படையில் பணியாற்றிய செந்தில்குமார் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவர் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று அவரை மீண்டும் மாநகர ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தர விட்டுள்ளார். அவர் திடீரென மாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேட்டையை சேர்ந்த கொம்பையா என்பவரது மனைவி பூலம்மாளுக்கும், போலீஸ்காரர் செந்தில்கு மாரின் தந்தை ராஜதுரைக்கும் இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சனை குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இரு வீட்டாரும் செயல்படுமாறு தெரி விக்கப்பட்டு இருந்தது.
தற்போது அந்த இடப்பிரச்சினை மீண்டும் நடந்து வருவதால், செந்தில்குமார் ஆயுதப்படைக்கு மீண்டும் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
மாநகர பகுதியில் ஒரு சில நுண்ணறிவு பிரிவு போலீசார் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணிபுரிவதால், அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், சில நுண்ணறிவு போலீசார் தங்களது சொந்த வியாபார வேலைகளில் தான் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் சில அமைப்பினர் புகார் கூறுகின்றனர்.
எனவே மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இதனை கவனத்தில் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் யாரேனும் பணியாற்றினால் அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.