உள்ளூர் செய்திகள்

மாநிலத்தில் முதன் முதலாக தடைகளை தகர்க்கும் பயிற்சி களம் தொடக்கம்

Published On 2023-08-23 14:51 IST   |   Update On 2023-08-23 14:51:00 IST
  • மாநிலத்தில் முதன் முதலாக தீயணைப்போர்களுக்கான தடைகளை தகர்க்கும் பயிற்சி களம் பெரம்பலூரில் தொடங்கப்பட்டது
  • பயிற்சி களத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஆபாஷ் குமார் திறந்து வைத்தார்

பெரம்பலூர்,

பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் மாநிலத்தில் முதன் முதலாக தீயணைப்போர்களுக்கான தடைகளை (அப்ஸ்டகல்ஸ்) தகர்க்கும் பயிற்சி களம்  தொடங்கப்பட்டது. இதனை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஆபாஷ் குமார் திறந்து வைத்து, பயிற்சியாளர்களுக்கான பயிற்சியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் வருகிற வடகிழக்கு பருவமழைைய முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தயார் நிலையில் உள்ள சிறப்பு தளவாடங்கள், உபகரணங்கள் மற்றும் ஊர்திகளை ஆய்வு செய்தார். தீயணைப்பு வீரர்களின் பிரமீடுகளை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து சிறந்த பயிற்சியாளர்கள், தீயணைப்பு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

மேலும் அதிகாரி ஆபாஷ்குமார், நிருபர்களிடம் கூறுகையில், இந்த தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் மாநிலத்திலேயே முதன் முதலாக அமைக்கப்பட்டுள்ள தீயணைப்போர்களுக்கான பயிற்சி களத்தை தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். வரும் நிதி ஆண்டில் தீயணைப்பு துறைக்கு அதிக நீதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதன்மூலம் அதிகளவு உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கான வாகனங்கள் வாங்கப்படவுள்ளது. தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்பு வளாகம் கட்டப்படும். தேவைப்படும் இடங்களில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கவும், புதிய தீயணைப்பு வீரர்களை நியமனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல துணை இயக்குனர் கல்யாணகுமார், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, உதவி மாவட்ட அலுவலர்கள் கோமதி, வீரபாகு மற்றும் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர்கள், அனைத்து நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News