பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராமமக்கள் சாலை மறியல்
- பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- இந்த கடையிலிருந்து மது போதையில் வாகனங்களில் வரும் நபர்களால் அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
பெரம்பலூர்,
பெரம்பலூர்-துறையூர் பிரதான சாலையில் பாளையம் கிராமத்திலுள்ள பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையிலிருந்து மது போதையில் வாகனங்களில் வரும் நபர்களால் அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதையறிந்த கிராம மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், தொடர்ந்து நடக்கும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தவும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் டாஸ்மாக் கடையை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சமுத்து மகன் முத்துசாமி (60) என்பவர் சாலையோரம் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது மது போதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் சைக்கிள் மீது மோதியதில் முத்துசாமி காயமடைந்தார். இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மாக் தாசில்தார் நூர்ஜஹானிடம் மனு அளித்தனர்.